விருதுநகர் வெடிவிபத்து சம்பவம்: கல்குவாரியில் விதிமீறல் கண்டுபிடிப்பு
விதிகளை மீறி கல்குவாரியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளை தகர்க்க வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே ஆவியூர் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிக்கு நேற்று பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை இறக்கி வைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின.
இந்த கோர விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆவியூர் காவல் நிலையத்தில் குவாரி பங்குதாரர் சேது ராமன் என்பவர் சரணடைந்தார். மேலும் குவாரி உரிமையாளர்கள் ராஜ்குமார் மற்றும் சேது ராமன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆவியூர் கல்குவாரியில் இன்று விருதுநகர் மாவட்ட கனிமவள துணை இயக்குனர் தங்க முனிசாமி தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், விதிகளை மீறி கல்குவாரியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளை தகர்க்க வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாறைகளை துளையிட்டு அதிக ஆழத்தில் வைத்துள்ளதால் வெடிமருந்துகளை அப்புறப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டரின் அனுமதியைப் பெற்று, பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்த பின்பு குவாரியில் உள்ள வெடிகள் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.