மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாக மாறிய விராலிமலை புதிய பஸ் நிலையம்

விராலிமலை புதிய பஸ் நிலையம் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாக மாறியது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-03 18:43 GMT

விராலிமலை:

வாரச்சந்தை

விராலிமலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு அதிகாலை ஆட்டு விற்பனையும், அதனை தொடர்ந்து காய்கறி விற்பனையும் நடைபெறும். விராலிமலை, மணப்பாறை தோகைமலை, குளித்தலை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வியாபாரம் செய்து விட்டு செல்வர். இந்த வாரச்சந்தைக்கு விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி செல்வர். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மதியம் முதலே கடைவீதி மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகள் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும்.

பஸ்கள் உள்ளே வருவதில்லை

இந்த வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அருகில் உள்ள புதிய பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்தி விடுகின்றனர். மேலும் பொதுமக்கள் வரும் மோட்டார் சைக்கிள்களையும் இந்த பஸ் நிலையத்தின் உள்ளேயே வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் உள்ளே வர முடியாத நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்திற்குள் ஒரு சில பஸ்கள் மட்டும் வந்து செல்லும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளால் அந்த ஒரு சில பஸ்களும் உள்ளே வராமல் செல்லும் நிலை ஏற்படுகிறது.

கோரிக்கை

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரும் வாகனங்களை புதிய பஸ் நிலையத்திற்குள் நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தி அறிவிப்பு பலகையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைத்திருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த அறிவிப்பு பலகையை தள்ளிவிட்டு தங்களது வாகனங்களை பஸ் நிலையத்திற்கு உள்ளேயே நிறுத்தி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

விராலிமலை வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், பஸ் நிலையத்தில், தற்போது ஒரு சில அரசு பஸ்கள் வரும் நிலையில் தனியார் பஸ்கள் உள்ளே வருவதில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு உள்ள சந்தையானது மணப்பாறைக்கு அடுத்தபடியாக பெரிய சந்தையாக திகழ்கிறது. இங்கு வாரம்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனியாக ஒரு இடத்தை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தந்து அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வாகனங்கள் நிறுத்த தனி இடம் வேண்டும்

தேத்தாம்பட்டியை சேர்ந்த துரைச்சாமி கூறுகையில், நான் சிறு வயது முதலே வாரச்சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். அப்போது சந்தைக்கான இட வசதி என்பது அதிக அளவில் இருந்ததால் வாகனங்கள் நிறுத்துவதற்கும் பொதுமக்கள் வந்து செல்வதற்கும் சிரமமின்றி இருந்தது. தற்போது இப்பகுதியில் அம்மா பூங்கா, புதிய பஸ் நிலையம் ஆகியவை வந்ததால் சந்தைக்கான இடவசதி குறைந்து பொதுமக்கள் வந்து செல்லவும் வாகனங்கள் நிறுத்தவும் மிகவும் சிரமமாக உள்ளது. தற்போது புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லாததாலேயே அனைத்து வாகனங்களையும் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்கள் உள்ளே வரவும், வாகனங்களை நிறுத்த ஊராட்சி நிர்வாகம் தனி இடம் ஒதுக்கி தரவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்