திருத்தணியில் சாலைவிதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
திருத்தணியில் சாலைவிதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முகூர்த்த நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருத்தணியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலை ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருவது போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணம்.
இந்த நிலையில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
வாகன ஓட்டிகள் சிலரது அலட்சிய போக்கால் சாலை விபத்துகள் ஏற்பட்டு அவற்றால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதிகப்படியான வாகன விபத்துகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் செல்வதால் ஏற்படுகிறது.
மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் விதிகளை மீறி இயக்கப்படுவதாலும் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்காமலும், அதிவேகமாக ஓட்டிச்செல்வது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக இருசக்கர வாகனங்களில் அமர்ந்து செல்வது, சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது போன்ற நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மட்டுமின்றி எதிரில் அல்லது பக்கத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் போலீஸ்துறையால் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறுபவர்களளின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக திருத்தணி அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, சித்தூர் சாலை, சென்னை பைபாஸ் சாலை மார்க்கெட் பகுதி போன்ற இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் சாலை ஓரத்தில் கடையை நடத்தும் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்த அனுமதிக்க கூடாது, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.