18 கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டுபிடிப்பு

வடபுதூரில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில் விதிமுறையை மீறிய 18 கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் துறைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.

Update: 2023-06-28 04:45 GMT

கிணத்துக்கடவு,

வடபுதூரில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையில் விதிமுறையை மீறிய 18 கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் துறைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.

கல் குவாரியில் ஆய்வு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாக தொடர்ந்து புகார்கள்வந்தன.

இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரில் உள்ள ஒரு கல் குவாரியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சசிகுமார், தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கற்கள் எவ்வளவு வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அபராதம் விதிக்கப்படும்

இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், கல் குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரைக்கும் 18 குவாரிகளில் அளவீடு பணிகள் மேற்கொண்டதில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அந்த குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது, என்றனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறையை மீறிய கல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்க பரிந்துரை செய்து உள்ளனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் தரப்பில் விதிமுறை மீறல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே சப்-கலெக்டர் தலைமையில் மீண்டும் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அப்போது விதிமுறையை மீறி இருந்தால் எவ்வளவு கற்கள் எடுக்கப்பட்டு உள்ளதோ அதை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்