பழுதான சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள்
பழுதான சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,700 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு அத்தனாவூர் பகுதியில் படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை, நிலாவூர் ஏரி, ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளன.
இதனால் பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களுடனும், அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள புங்கானூர் ஏரியில் படகு இல்லம் உள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.15 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய உபகரணங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. ஊஞ்சல் உள்ள தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குழந்தைகள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படாதவாறு விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் பெற்றோர்கள், சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.