ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தொடங்கிவைத்தார்.

Update: 2023-10-07 21:43 GMT

பழங்கால வாகன அணிவகுப்பு

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், 'கார் டிரைவ்-2023' என்ற பழங்கால வாகன கண்காட்சி கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றுடன் கர்நாடகா ஹெரிடேஜ் மோட்டார் வாகனங்களும் வந்தன.

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு நடந்தது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த அணிவகுப்பானது தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள சிம்சன் நிறுவனத்தில் இருந்து தொடங்கி மாரியம்மன் கோவில் வரை சென்று கமர்சியல் சாலை வழியாக மீண்டும் சிம்சன் நிறுவனத்தை வந்தடைந்தது.

இன்று கண்காட்சி

முக்கிய சாலையில் வரிசையாக சென்ற பழங்கால வாகனங்களை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். அவர்கள் கார்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் தலைவர் பால்ராஜ் வாசுதேவன், செயலாளர் எம்.எஸ்.குகன், பொருளாளர் விஜி ஜோசப் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பழங்கால வாகனங்கள் தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள சிம்சன் நிறுவனத்தில் கண்காட்சிக்காகவும், பொதுமக்கள் பார்வைக்காகவும் நிறுத்தப்பட்டு உள்ளன.

ஊட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழங்கால வாகன கண்காட்சி நடக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள கார்களை கண்டு ரசிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

35 கார்கள்

இந்த அணிவகுப்பில் 35 கார்கள், 10 இருசக்கர வாகனங்கள், படுக்கை வசதிகளுடன் கூடிய பஸ் (கேரவன்) ஆகியவை இடம்பெற்றது. இவை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு உள்ளன. இதில் ரோல்ஸ் ராய்ஸ், பியட், ஆஸ்டின், மெர்சிடஸ் பென்ஸ், ஜாக்குவார், போர்டு உள்பட பல்வேறு பிரபல நிறுவனங்களின் கார்கள் இடம் பெற்று உள்ளன.

குறிப்பாக 1932-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'டாட்ஜ் பிரதர்ஸ்' சொகுசு கார், 1934-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆஸ்டின், 1928-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போர்டு கார், 1936-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சொகுசு கேரவன், 1945-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிட்ரோயன் ஹாட் ராடு கார், 1966-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வோக்ஸ்வேகன் ஆகியவை இடம் பெற்று உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்