ராஜேந்திரப்பட்டினம் சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-07 17:01 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் பிரசித்திபெற்ற சர்வசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 5-ந்தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாகனம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி, வேத பாராயணம், கணபதி மூலமந்திரம், ஜபம், ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக வேள்வி, மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி, கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், விசேஷ சாந்தி, 3-ம் கால யாக வேள்வி, விசேஷ திரவிய ஹோமத்துடன் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 8 மணிக்கு கோபூஜை, சூரிய பூஜை, 4-ம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், பூர்ணாகுதி, யாத்திர தானம் நடைபெற்று கடம் புறப்பாடு நடந்தது. தொடா்ந்து திருக்கைலாய பரம்பரை எனும் ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து காலை 10.30 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்