தயார் நிலையில் விதவிதமான விநாயகர் சிலைகள்

தயார் நிலையில் விதவிதமான விநாயகர் சிலைகள்

Update: 2022-08-24 11:45 GMT

காங்கயம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்த, ஊதியூர் அருகே விதவிதமான விநாயகர் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்துவது நடந்து வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 31-ந் தேதி வருவதால் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான சிலைகளும் ஆங்காங்கே தயார் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்கான சிலைகள் ஊதியூர் அடுத்துள்ள வஞ்சிபாளையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த சிற்ப தொழிலாளர்கள் இங்கு வந்து குடும்பத்துடன் கடந்த 3 மாத காலமாக தங்கியிருந்து இந்த சிலைகளை செய்து வருகின்றனர். முழுவதும் கிழங்கு மாவு, காகித கூழ் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு நேர்த்தியாக சிலைகளை வடிவமைத்துள்ளனர்.

3 அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மயில்மீது அமர்ந்த விநாயகர், ரதத்தில் அமர்ந்துள்ள விநாயகர், சிங்கம் மற்றும் மாடு மீது அமர்ந்துள்ள விநாயகர் என பல்வேறு விதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் சிலைகள் இங்கு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் அடுத்த சில நாட்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அடங்கிய இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி குழுவினரால் வாங்கிச் செல்லப்பட்டு ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சிலைகளின் விலை அதன் உயரத்திற்கு தகுந்தாற்போல நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்