குடிமங்கலம் பகுதியிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 27 விநாயகர் சிலைகள் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்துமுன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 95 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் குடிமங்கலம் பகுதியில் 44 இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டது.இதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மடத்துக்குளம் அமராவதி ஆற்றிலும், குமரலிங்கம் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் அங்குள்ள அமராவதி ஆற்றிலும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊர்வலம்
பாதுகாப்பு கருதி ஒவ்வொரு அமைப்புகளும் தனித்தனியாக கரைக்கும் வகையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இரவு நேரத்திலும் கரைக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று குடிமங்கலம் பகுதியிலுள்ள சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.அந்தவகையில் இந்துமக்கள் கட்சியின் சார்பில் 23 சிலைகளும், பொதுமக்கள் சார்பில் 4 சிலைகளும் என மொத்தம் 27 சிலைகள் கரைக்கப்பட்டன.மீதமுள்ள சிலைகள் இன்று கரைக்கப்படவுள்ளன.