புறநகரில் 413 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு- பாதுகாப்பு பணியில் 750 போலீசார்

மதுரை புறநகரில் 413 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அந்த பகுதிகளில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Update: 2023-09-18 20:24 GMT


மதுரை புறநகரில் 413 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அந்த பகுதிகளில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு, விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களில், எளிதில் தீப்பற்றாத வகையில் தகரக் கூரை அமைக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடங்களில் ஒவ்வொன்றுக்கும் போலீசார் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். அவர்களோடு, சிலை வைத்துள்ள அமைப்பினரும் குழு ஒன்றை அமைத்து பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். மின்வசதி உள்ள இடங்களாக இருக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதியும் இருக்கவேண்டும் என காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வேறு புதிதாக யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என ேபாலீசார் தெரிவித்தனர்.

413 சிலைகள்

அதன்படி, புறநகர் பகுதிகளான மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், திருமங்கலம், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, சிலைமான், கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி, கள்ளிக்குடி, சமயநல்லூர், பாலமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் 413 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

புறநகரில் மட்டும் சுமார் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பேரையூர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பேரையூரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது சாலையின் இருபுறமும் பக்தர்கள் நின்று விநாயகரை வழிபட்டனர். பின்னர் விநாயகர் சிலை பேரையூரில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டது.

பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.பின்னர் அங்குள்ள நீர்நிலையில் சிலை கரைக்கப்பட்டது.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கிரட் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரவை பொறுப்பாளர் எஸ்.எஸ்.குருசாமி தலைமை தாங்கினார். வக்கீல்கள் செல்வகுமார், அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைவாணன் வரவேற்றார். இந்த ஊர்வலத்தை தொழிலதிபர் சீனிவாசன் தொடங்கிவைத்தார். விநாயகர் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

திருப்பரங்குன்றம் முருகன்கோவிலின் கருவறையில் உள்ள 5 சன்னதிகளில் ஒன்றாக கற்பக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருகேகூத்தியார் குண்டில், உள்ள அகத்தியர் வழிபட்ட விநாயகர் கோவில், திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரில் உள்ள கல்யாண விநாயகர்,திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சதுர்த்தி விழா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்