விநாயகர் சதுர்த்தி விழா குறித்த கூட்டத்தில் இந்து முன்னணியினர் வெளியேறியதால் பரபரப்பு

திருச்சி மாநகர போலீசார் நடத்திய விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணியினர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-26 19:27 GMT


திருச்சி மாநகர போலீசார் நடத்திய விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணியினர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனை கூட்டம்

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை கரைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பிற மதத்தினரை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகரத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் காவிரி ஆற்றில் சிலை கரைப்பின் போது சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும், அமைதியான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருச்சி மாநகரத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைவைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் விநாயகர் ஊர்வலத்திற்கு சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

இந்து முன்னணியினர் வெளியேறினர்

முன்னதாக கூட்டத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பேசும்போது, அரசு அளித்த கட்டுப்பாடுகள் மட்டுமே தற்போது உள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம், புதிதாக எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எத்தனை விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்பது இனிமேல் தான் தெரியவரும். சட்டத்திற்கு உட்பட்டு வைத்தால் அனுமதி அளிக்கப்படும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்திற்கு உட்பட்டு சிலை வைக்க வேண்டும் என்பதே போலீசாரின் அறிவுரை. விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்தே கரைக்கப்படும் என்பதால் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்னர் பராமரிப்பு பணிகளுக்காக காவிரி பாலம் மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்