விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா எச்சரிக்கை விடுத்துஉள்ளார்.

Update: 2022-08-09 16:37 GMT

பொள்ளாச்சி

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா எச்சரிக்கை விடுத்துஉள்ளார்.

விநாயகர் சதுர்த்தி

பொள்ளாச்சி போலீஸ் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள வேண்டுகோளின்படி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட ரசாயன கலவை இல்லாத சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் தான் சிலைகளை கரைக்க வேண்டும். ஒவ்வொரு விநாயகர் சிலையும் வைக்கப்படும் தினத்தில் இருந்து அந்தந்த சிலைக்கு 5 நபர்களை பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் சிமெண்டு சீட், துத்தநாகத்தகடு போன்றவற்றால் மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்க கூடாது

போலீசார் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும். ஊர்வலத்தில் வரும் வாகனங்கள் கண்டிப்பாக ஒலிப்பெருக்கி வைக்க கூடாது. ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு மாலை 6 மணிக்குள் விசர்ஜனம் செய்து விட வேண்டும். பிற மதத்தினரை புண்படுத்தும் விதமான கோஷங்களை ஊர்வலத்தில் பயன்படுத்த கூடாது. ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கவோ, பெரிய அளவிலான கொடிகளை, பேனர்களை எடுத்து வரக்கூடாது. பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால், அந்த அமைப்பிற்கான தலைவர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நிபந்தனைகளை மீறும் ஊர்வலத்தினர் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்ககை எடுக்கப்படும். ஊர்வலத்தின் போது சிலைகளை எடுத்து செல்லும் வாகனங்களை முன்கூட்டியே தேர்வு செய்ய வேண்டும். அதை தவிர வேறு வாகனங்களை ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

சிலை பாதுகாப்பு குழு

சிலை பாதுகாப்பிற்கு அதன் அமைப்பாளர்களே முழுபொறுப்பாகும். 20 உறுப்பினர்கள் கொண்ட சிலை பாதுகாப்பு குழு அமைத்து சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடத்தில் போதிய வெளிச்சம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்துகளை தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடங்களின் அருகில் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. அனுமதி இல்லாமல் கூடுதலாக சிலைகளை வைக்க கூடாது. ஊர்வலத்தில் வரும் நபர்கள் குடிபோதையில் இருக்க கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், அனந்தநாயகி, சாந்தி, சரவணபெருமாள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், விழா அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்