விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார்.;

Update:2022-08-24 17:47 IST

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வழிபாட்டு விதிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பாக நடைபெறவில்லை.

இரு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 381 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். விநாயகர் சிலையை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் உரிமையாளரது ஒப்புதல் கடிதம் இல்லாமல் வைக்கக்கூடாது.

அதேபோல விநாயகர் சிலையை வைக்கும் இடங்களில் மின்வாரியம், தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியனவற்றின் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்பவர்கள் முறையாக அந்தந்த பகுதிகளில் உள்ள ஆர்.டி.ஓ.க்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசு அனுமதியில்லாமல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யக் கூடாது.

அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்திலேயே அனுமதி பெற வேண்டிய துறைகளின் அலுவலர்கள் இருப்பார்கள். அவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களிடம் அனுமதி பெற்று தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனுமதி தேவைப்படுவோர் ஒவ்வொரு துறையாக சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. கண்டிப்பாக ஒலி பெருக்கி உரிமம் பெற்றிருக்க வேண்டும். பூஜையின் போது மட்டும் காலையிலும், மாலையிலும் 2 மணி நேரமும் மட்டுமே ஒலிபெருக்கி வைத்து கொள்ள வேண்டும்.

வழிபாடு செய்யப்படவுள்ள விநாயகர் சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். வழிபாடு செய்யப்படும் இடத்திற்கு அருகில் அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் படங்கள் வைக்கவும் அனுமதியில்லை.

அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். சிலை வழிபாடு செய்யும் இடத்திலோ அல்லது சிலை கரைக்கும் இடத்திலோ பட்டாசு வெடிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது. விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கரைத்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்