விநாயகர் சிலைகள் உடைப்பு

விநாயகர் சிலைகள் உடைப்பு

Update: 2022-09-07 12:18 GMT

திருப்பூர்

திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகர் சிலைகளை மர்ம ஆசாமிகள் உடைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈஸ்வரன் கோவில்

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தெற்கு வாசல் வெளியே விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய அர்ச்சகர் சென்றார். அப்போது விநாயகர் சிலையின் இடது கை உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவில் இந்த சிலையை உடைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. சிலையை உடைத்தது யார்? எதற்காக உடைத்தனர்? என்ற விவரம் தெரியவில்லை. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

2 சிலைகள் உடைப்பு

இதுபோல் தென்னம்பாளையம் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது. இந்த விநாயகர் சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை கோவிலுக்கு சென்றவர்கள் இதை கவனித்து தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். மர்ம ஆசாமிகள் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரேநாளில் இரு கோவில்களில் விநாயகர் சிலைகளின் கைகளை மட்டும் குறிவைத்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில் விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்