விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-05 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள டட்நகர் பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் மனைவி தெரசம்மாள் (வயது 70). இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தார். திடீரென அவர், தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று தெரசம்மாளை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாயிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு சொந்தமான இடத்தில் சிமெண்டு சாலை போடுவதற்காக தனிநபர்கள் சிலர், எனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்டால் என்னை அவர்கள் தாக்குகிறார்கள், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபற்றி கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரிப்பதாகவும், இதுபோன்று அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்றும் தெரசம்மாளை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தினால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்