சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-09-04 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த சோதனைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி மகன் அசோக் என்கிற மணிவண்ணன் (வயது 21), மீனவர். இவருடைய தங்கை, தனது வீட்டில் டியூசன் எடுத்தார். அந்த டியூசனில் அதே பகுதியை சேர்ந்த சில மாணவ- மாணவிகள் படித்தனர்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய மாணவி டியூசனுக்கு வந்தார். அப்போது டியூசனில் யாரும் இல்லை. அசோக் மட்டும் இருந்தார். அவர், அச்சிறுமியிடம் புத்தகம் எடுத்து தருவதாக கூறி தனியாக ஒரு அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

வாலிபருக்கு சிறை

இதுகுறித்து அச்சிறுமி அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம், நடந்த சம்பவத்தை பற்றி கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அசோக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட அசோக்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அசோக், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்