விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

Update: 2023-03-28 18:45 GMT

மத்திய அரசு வழங்கியதுபோல் 1.7.2021 முதல் அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், அரசின் நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்தமுறை நியமனங்களை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கங்களின் போராட்டக்குழு ஆகியவை சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மேற்கண்ட சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

இதன் காரணமாக வருவாய்த்துறை அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், நில அளவைப்பிரிவு அலுவலகம், புள்ளியியல் துறை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பணிக்கு வந்திருந்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அரசு அலுவலகங்கள் நேற்று சற்று வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது. ஒரு சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் யாரும் இன்றி இருக்கைகள் காலியாக கிடந்தன. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பார்த்திபன், வேங்கடபதி, சிவக்குமார், மகேஸ்வரன், பாலமுருகன், காந்திமதி, கிருபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஜெய்கணேஷ், இளங்கோவன், சம்பத், சேகர், வீரப்பன், சங்கர், டெல்லிஅப்பாதுரை, அதிதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாநில துணைத்தலைவர் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேலு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் வீரபத்திரன், பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் குமாரதேவன், பேரூராட்சி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் சங்க மாநில தணிக்கையாளர் தேவநாதன், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்க தலைவர் மணிமாறன், சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் விஜயராணி நன்றி கூறினார். இதனால் அரசு அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்