விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பள்ளியந்தாங்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 58), விவசாயி. இவருடைய மகன் சுரேஷ்குமார் (30) என்பவர் காட்டுநெமிலி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காத்தவராயன் மகளை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுரேஷ்குமாரிடம் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் ஊரான காட்டுநெமிலிக்கு வந்துவிட்டார். இதனால் அவரின் அண்ணன் முருகவேல் (28) என்பவர், சுரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இந்த தகராறை விலக்கச்சென்ற சுரேஷ்குமாரின் தந்தை பழனிவேலை முருகவேல் நெட்டி கீழே தள்ளினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
7 ஆண்டு சிறை
இதுகுறித்து சுரேஷ்குமார், எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முருகவேல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ, 1,000 அபராதமும், இந்த அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகவேல், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.