விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தர்ணா

வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரசின் அடையாள அட்டைகளை வீசிஎறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-02-06 18:45 GMT

விழுப்புரம்

நரிக்குறவர்கள் தர்ணா

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று நரிக்குறவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக்கோரியும், சாதிச்சான்று வழங்கக்கோரியும் முறையிட்டனர்.

அடையாள அட்டைகளை வீசி எறிந்தனர்

அதற்கு, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த அவர்கள், வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று கேட்டு பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகிறோம், இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே நாங்கள் இங்கிருந்து கலைந்துசெல்ல மாட்டோம் என்று கூறியபடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை தங்களுக்கு வேண்டாமென்று கூறியபடி அதனை தூக்கி வீசிஎறிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

கலெக்டரிடம் மனு

இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அப்போது அவர்கள், மாவட்ட கலெக்டர் சி.பழனியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் விக்கிரவாண்டி பேரூராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி குடிசை வீடு கட்டி வசிக்கிறோம். அரசு வழங்கும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும் இதுவரை எங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக தூங்க முடியாமல் சிரமப்படுகிறோம். விஷ ஜந்துக்களால் எங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

சாதிசான்றிதழ்

நாங்கள் தொழில் செய்ய உரிய கடன் வசதியும் வழங்க மறுக்கிறார்கள். சாதிச்சான்றிதழ் இல்லாததால் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், இதில் தலையிட்டு எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே வீட்டுமனைப்பட்டா வழங்கி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதோடு எங்கள் குழந்தைகள் படிக்க ஏதுவாக சாதிச்சான்றிதழ் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்