விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சோழகனூர் ஏரியில் மண் அள்ளுவதை நிறுத்தக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-01-04 18:45 GMT

விழுப்புரத்தை அடுத்த சோழகனூர் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி சோழகனூர் கிராம மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியில் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை தேசிய நெடுஞ்சாலை பணிக்கு பார் மண் எடுக்கப்பட்டது. அப்பணிக்காக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்தனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

முற்றுகை

இந்த சூழலில் தற்போது சோழகனூர் ஏரியில் இருந்து விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிக்காக தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனம் மேலும் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை. தொடர்ந்து, அந்த ஏரியில் இருந்து 4 வழிச்சாலை பணிக்காக மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

மண் அள்ளுவதை நிறுத்தக்கோரி...

அப்போது கிராம மக்கள் கூறுகையில், சட்டவிதிமுறைகளை மீறி ஏரியில் ஏற்கனவே 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். அதன் விளைவாக இதுவரை 15 உயிர்கள் பலியாகியுள்ளது. மேலும் விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்து வருகின்றனர். இது எங்கள் கிராமத்திற்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே ஏரியில் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்