குடிநீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்
குடிநீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டம்
பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தொண்டராயன்பாடி ஊராட்சியில் விச்சலூர் படுகை உள்ளது. இக்கிராமத்தில் 75-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று விச்சலூர் படுகை பொதுமக்கள் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயில் அருகில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் திரளான ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனர். தகவல் அறிந்ததும் பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜா, பொற்செல்வி ஆகியோர் நடத்தி பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு அடுப்பு அமைத்து சமையல் செய்தனர்.
மயங்கி விழுந்த மூதாட்டி
காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அந்த ஊரைச் சேர்ந்த சாவித்திரி (வயது60) என்பவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பூதலூர் ஒன்றிய ஆணையர் பொற்செல்வி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.