மருதையாற்றை விரைந்து சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மருதையாற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது குரும்பாபாளையத்திலும், சாத்தனூரிலும் கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான மருதையாற்றை தமிழக அரசு விரைந்து சீரமைக்க ேவண்டும், நெடுவாசல் அருகே மருதையாற்றில் திறந்துவிடப்படும் பெரம்பலூர் நகராட்சியின் பாதாள சாக்கடைக்கழிவு நீரை முறையாக சுத்திகரித்து பின்னர் ஆற்றில் விட ேவண்டும். குரும்பாபாளையம் கிராமத்தில் உள்ள புது ஏரியின் வடிகால் பகுதியானது ஒரு ஆண்டுக்கு முன்பு உடைந்து நீர் முழுவதும் வெளியேறிவிட்டது. எனவே இந்த வடிகால் பகுதியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குரும்பாபாளையம் கருப்புடையார் ஏரிக்கரையின் கிழக்கு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ேவண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.