குடிநீரின்றி தவிக்கும் வாழ்மங்கலம் கிராமமக்கள்

வாழ்மங்கலம் கிராமமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-23 18:45 GMT

திட்டச்சேரி:

 வாழ்மங்கலம் கிராமமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீரின்றி தவிப்பு...

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிப்பதற்கு மற்றும் அன்றாட தேவைகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீரை நம்பியே உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சரிவர குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும் தண்ணீர் குறைவான அளவில் வழங்கப்படுவதால் வாழ்மங்கலம், திரவுபதிஅம்மன் கோவில் தெரு, மடத்தெரு, தோப்புத் தெரு, மாதாகோவில் தெரு, கள்ளிக்காட்டு போலகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி வாழ்மங்கலம் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு குடம் தண்ணீர் ரூ.5

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த காளிதாஸ் கூறுகையில்,

கடந்த 10 ஆண்டுகாலமாக இங்கு சரிவர குடிநீர் இன்றி தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் போன்றவற்றை செய்து வருகின்றோம். ஆனால் இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. குடிநீர் வழங்கும் அளவும் குறைவாக உள்ளது. இதனால் போதிய அளவு குடிநீரின்றி அண்டை மாநிலமான காரைக்கால் பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 என பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

அந்த பகுதியை சேர்ந்த பரணி கூறுகையில், நாங்கள் தண்ணீரின்றி தவிப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீரானது குழாய்களில் மட்டுமே நேரடியாக வழங்கப்படுகிறது. அதனால் அதனை சேமித்து வைத்து தேவைக்கேற்ப வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், சேமிப்பதற்கு ஏதுவாக தொட்டி அமைத்து அதன் மூலம் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்