வெறையூரில் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் கிராம மக்கள்
வெறையூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர்.
வெறையூரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். நிழற்குடை மாட்டுதொழுவமாக மாறி உள்ளது.
அடிப்படை வசதிகள்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வெறையூர் கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
இந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை பெயர்ந்து சேதமான நிலையில் கிடக்கிறது. இதில் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு உள்ளது. கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது மட்டுமல்லாமல் வெளியே செல்லவும் வழி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காட்சி பொருள்
குடிநீருக்காக ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் போடப்படும் தெரு மின்விளக்குகள் பல மாதங்களாக பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டும் கழிவுநீர் வெளியே செல்லவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் தெரு மையப் பகுதி மற்றும் கடைசிப் பகுதியில் குடிநீர் தொட்டிகள் இருந்தும் அதில் தண்ணீர் வருவதில்லை.
மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. அதனை நிறுத்துவதற்கு சுவிட்ச் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுற்றுவட்டார பகுதியின் மையப்பகுதியாக விளங்கும் இங்கு வெளிப்பகுதிகளில் இருந்து பஸ்சுக்காக மட்டுமல்லாமல் பள்ளி செல்வதற்கும் கல்லூரி செல்வதற்கும் அன்றாடம் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இடமாக வெறையூர் பஸ் நிறுத்தம் உள்ளது.
ஆனால் பஸ் நிறுத்தத்தின் அருகில் இருக்கும் நிழற்குடை மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது. மேலும் மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. இங்கு வைக்கோல்கள் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. மாடுகளும் கட்டப்படுகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.