இறந்தவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்

மயான பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் இறந்தவரின் உடலுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-11 19:13 GMT


மயான பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் இறந்தவரின் உடலுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மயானம்

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் நகராட்சி இடத்தில் பொது மயானம் அமைந்துள்ளது. இந்த இடம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடமாக இருந்தாலும் பஞ்சாயத்து யூனியன் நிதியில் இங்கு கொட்டகை போடப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் மயானத்தை சுற்றிலும், மயானத்திற்கு செல்லும் வழியிலும், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதால் மயானத்திற்கு செல்வதற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் மயானத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் மயானத்திற்கு வருவோருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக புகார் கூறப்படுகிறது .

போராட்டம்

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நேற்று அல்லம்பட்டி பகுதியில் உள்ளவர்கள் இறந்தவரின் உடலுடன் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலியுறுத்தல்

உடனடியாக குப்பைகளை அகற்றுவதுடன் பொதுமயானத்திற்குரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் கூரைக்குண்டு பஞ்சாயத்து நிர்வாகம் பொது மயானத்திற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் பஞ்சாயத்திற்கு மாற்றி கொடுத்தால் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பஞ்சாயத்து நிர்வாகம் செய்து கொள்வதுடன் பஞ்சாயத்தில் வசிக்கும் மக்களுக்கும் மயானம் உரிய வகையில் பயன்பட வாய்ப்பு ஏற்படுமென வலியுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்