விறகு அடுப்புக்கு மாற தொடங்கிய கிராம மக்கள்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புற மக்கள் விறகு அடுப்புக்கு மாற தொடங்கி விட்டனர்.

Update: 2023-08-22 18:59 GMT

சாயல்குடி, 

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புற மக்கள் விறகு அடுப்புக்கு மாற தொடங்கி விட்டனர்.

கியாஸ் அடுப்பு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பெண்கள் தங்கள் வீடுகளில் சமையல் செய்வதற்கு அதிக அளவில் விறகு அடுப்பு மற்றும் மண்எண்ணெய் மூலம் எரியக்கூடிய ஸ்டவ் அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். அதன்பின்னர் கியாஸ் சிலிண்டர் வருகையை தொடர்ந்து அனைவரின் வீடுகளிலும் கியாஸ் அடுப்பு இடம் பெற்று விட்டது.

குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலுமே கியாஸ் அடுப்பு, எலக்ட்ரிக் ஸ்டவ், எலக்ட்ரிக் குக்கர் உள்ளிட்டவைகள் மூலமே சமையல் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கிராமங்களிலும் விறகடுப்பு பயன்பாடு குறைந்து வருகின்றது.

சிலிண்டர் விலை உயர்வு

நாடு முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாகவே கியாஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது என்று சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.550 ஆக இருந்தது தற்போது ரூ.1220 என விலை இருந்து வருகின்றது.

கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வால் ராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் மீண்டும் விறகடுப்பு மற்றும் மண்எண்ணெய் அடுப்புக்கு மாறத் தொடங்கி விட்டனர் என்றே சொல்லலாம்.

குறிப்பாக சாயல்குடி அருகே கடலாடி, இதம்பாடல், சிக்கல், நல்லிருக்கை மாவட்டத்தின் பெரும்பாலான கிராம மக்கள் கியாஸ் அடுப்பின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு மீண்டும் விறகடுப்புக்கு மாறத் தொடங்கி விட்டனர். அதற்காக கண்மாய் மற்றும் ஊருணி கரையோரம் மற்றும் காடுகளிலும் வளர்ந்து நிற்கும் காட்டு கருவேலம் மரம், காய்ந்துபோன பட்டுப்போன மரம் உள்ளிட்டவையும் வெட்டி சமையல் செய்வதற்கு சேகரித்து தள்ளு வண்டியில் வைத்தும், தலையில் சுமந்த படியும் வீடுகளுக்கு கொண்டு செல்ல தொடங்கிவிட்டனர்.

விலையை குறைக்க வேண்டும்

இதுகுறித்து சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கூறிய போது:-

கியாஸ் சிலிண்டரின் விலை என்பது சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து வருகின்றது. தற்போது ஒரு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1220 ஆக உள்ளது. நாளுக்கு நாள் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் சிலிண்டர் வாங்குவதை நிறுத்தி விட்டு பழையபடி விறகு அடுப்புகளுக்கு மாறி வருகிறோம். எனவே அரசு கியாஸ் சிலிண்டர் விைலயை குறைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்