சாலை வசதி கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட புண்ணியவயல் கிராமத்தில் சாலை அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த ஒரு பிரிவை சேர்ந்த கிராமமக்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை வசதி இல்லாததால் யாரேனும் இறந்தால் வயல்வெளியில் தூக்கிச்செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதேபோல் உடல்நிலை பாதித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.