டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கூறி கிராமமக்கள் டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-01 17:40 GMT

தாமரைக்குளம்

முற்றுகை போராட்டம்

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில் பஸ் நிலையம் அருகே பாருடன் கூடிய டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சட்டவிரோதமாக மது விற்பதாக கூறி, தி.மு.க. நகர்மன்ற உறுப்பினரின் கணவர் உள்பட பொதுமக்கள் கடைக்கு முன்பு திரண்டனர். அப்போது சட்டவிரோதமாக விற்றுக்கொண்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதினால் இந்த பகுதி வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் அனைவரும் செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு வரவில்லை

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. தற்போது 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதினால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முற்றுகை போராட்டம் நடைபெற்ற போதும் மதுவிலக்கு போலீசார் வந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்