குடிநீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்

கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-20 18:51 GMT

குடிநீர் தட்டுப்பாடு

கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்கள் தடையின்றி குடிநீர் பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் மின்மோட்டார் பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் இல்லாததால் பள்ளி மாணவ-மாணவிகளை உரிய நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், அன்றாட வேலைகளை செய்ய முடியாமலும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

சாலை மறியல்

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் குடியிருப்பு கிராமமக்கள் நேற்று மருதன்கோன் விடுதி நால்ரோடு பகுதியில் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை, கறம்பக்குடி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது ஆழ்குழாய் மின் மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்