டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 251 மனுக்கள் பெறப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராம மக்கள் ஒன்று திரண்டுவந்து அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அக்கடை திறக்கக்கூடாது என பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அவ்விடத்தில் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக்கடையை திறக்கக்கூடாது என துளாரங்குறிச்சி ஊராட்சி சார்பாக கடந்த சுதந்திரதினத்தன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
ரூ.3 கோடியை...
இதேபோல் ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிகளில் அமுதசுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இச்சங்கத்தின் ஊழியர்கள் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி மற்றும் மாதாந்திர சீட்டாக பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஊழியர் மே மாதத்தில் இருந்து வசூல் செய்ய வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அலுவலகம் சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து மேலாளர் மற்றும் பொறுப்பாளரிடம் பணம் குறித்து கேட்டபோது முறையான தகவல் அளிக்கவில்லை. இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தும் தங்களுக்கு இதுவரை பணம் எதுவும் நிறுவனம் வழங்கவில்லை. நிதி நிறுவனத்தில் சுமார் 250 நபர்களுக்கு மேல் கட்டிய ரூ.3 கோடியை திரும்ப வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.