அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கருப்பக்கோன் தெரு கிராமமக்கள்
ரேஷன்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கருப்பக்கோன் தெரு கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.
பஸ் வசதி இல்லை
கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த கருப்பக்கோன் தெரு கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஏழை கூலி தொழிலாளர்களாக உள்ளனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் 5 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோரிக்கை
இதேபோல் மறவன்பட்டியில் இருந்து கருப்பக்கோன்தெரு கிராமம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. கோட்டை காடு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையும் கரடுமுரடாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. கருப்ப கோன் தெருவில் சாலையில் பாலத்தின் நடுவே ஓட்டை ஏற்பட்டு பள்ளமாகி உள்ளது.
இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மாணவர்களை ஏற்றி செல்வதற்காக கிராமத்திற்கு வந்த தனியார் பள்ளி வாகனங்களும் தற்போது ஊருக்குள் வருவதில்லை. இதனால் பள்ளி சிறுவர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கருப்பக்கோன் தெரு கிராமத்திற்கு சாலை, பஸ், பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பள்ளிக்கூடம் அவசியம்
கருப்பக்ேகான்தெரு கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜ் கூறுகையில், கருப்பக்கோன் தெருவில் இருந்து முள்ளங்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மிக சிறுவயதில் தினமும் 4 கிலோ மீட்டர் நடந்து செல்வது மாணவர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. இதனால் மாணவர்கள் சரியாக பள்ளிக்கு செல்வது இல்லை. இடைநிற்றல் ஏற்படும் நிலையும் உள்ளது. தற்போது அங்கன்வாடியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். எனவே அடுத்த கல்வி ஆண்டில் இங்கு தொடக்க பள்ளிகூடம் அவசியம் அமைக்க வேண்டும் என்றார்.
ரேஷன்கடை, பஸ் வசதி வேண்டும்
என்ஜினீயரிங் பட்டதாரி பிரவீன் கூறுகையில், பஸ் வசதிக்காக எங்கள் கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தேர்தலின் போது மக்கள் பிரதிநிதிகள், செய்து தருவதாக வாக்குறுதி தருவதும் பின்னர் அதை மறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது. இதேபோல் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோ மீட்டர் பெண்கள் நடந்து செல்லும் நிலையும் உள்ளது. எனவே பகுதி நேர ரேஷன் கடையும் அவசியம் ஏற்படுத்த வேண்டும். மேலும் உடைந்த பாலம் பல மாதங்களாக சீரமைக்கபடாமல் உள்ளது. அதையும் சரிசெய்ய வேண்டும் என்றார்.