பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே கும்பிகுளம் பஞ்சாயத்து சீலாத்திகுளத்தில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பஞ்சாயத்து தலைவர் சந்தனமாரி மற்றும் ராதாபுரம் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.