குளத்தில் மீன் பிடிக்க குவிந்த கிராம மக்கள்
வேம்பார்பட்டியில் குளத்தில் மீன் பிடிக்க கிராம மக்கள் குவிந்தனர்.
சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் அழகர்குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன் பிடி திருவிழா நடத்துவது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலையில் குளத்தில் மீன் பிடிக்க கிராம மக்கள் குவிந்தனர். இதில் வேம்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்களும், திண்டுக்கல், நத்தம், சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களும் மோட்டார் சைக்கிள்களில் திரண்டு வந்தனர்.
அவர்கள் குளத்தில் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் ஊத்தா, வலை மூலம் ஜிலேபி, கட்லா, விறா, பாறை, பொட்லா, தேளி உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மீன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.