அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆற்றை ஆபத்தான முறையில் கிராம மக்கள் கடந்து செல்கிறார்கள். அங்கு மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-12-15 19:30 GMT

வேப்பனப்பள்ளி:-

வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆற்றை ஆபத்தான முறையில் கிராம மக்கள் கடந்து செல்கிறார்கள். அங்கு மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.

பெருக்கெடுத்து செல்லும் வெள்ளம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது மணவாரனப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன முனியப்பன் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்துக்கு செல்ல கங்கமடுகு கிராமத்தில் இருந்து குப்தா நதியை கடந்து செல்ல வேண்டும். கடந்த ஒரு வருடமாக குப்தா நதியில் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போது மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடும் வெள்ளப்பெருக்கு

அந்த கிராம மக்கள் சுமார் ஒரு ஆண்டாக ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி கடந்து செல்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள கன மழையால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் 2 மாதங்களாக கிராமத்திலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை மருத்துவ வசதி கூட இல்லாமல் கிராமத்திலேயே முடங்கி உள்ளனர். மேலும் ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் ஆற்றை கடந்து செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

மேம்பாலம்

ஒரு சிலர் மட்டும் ஆபத்தான முறையில் பாய்ந்து ஓடும் வெள்ளப்பெருக்கு ஆற்றில் ஊன்றுகோலை வைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் வந்து கிராம மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஆற்றில் ஆபத்தான முறையில் தோளில் அமர வைத்து பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த கிராம மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

கல்வி பாதிப்பு

அந்த பகுதியில் வசிக்கும் 6-ம் வகுப்பு மாணவி ஜீவிதா:-

எங்கள் பகுதியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. மேலும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தொடர்ந்து பள்ளிக்கு செல்லாததால் என்னை போன்ற மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

சின்ன முனியப்பன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி பவானி:-

குப்தா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் பலரும் அவசர தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கிறார்கள். பள்ளி குழந்தைகளை தூக்கி கொண்டு ஆற்றில் செல்லவே அச்சமாக உள்ளது. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும்.

வெளியே வர முடியவில்லை

அதே ஊரை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்:-

எங்கள் கிராம மக்கள் அவசர தேவைகளுக்காக கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மருத்துவ தேவைகளுக்காக கூட வெளியே வர முடியவில்லை. குப்தா ஆற்றில் முன்பு வெள்ளம் இந்த அளவு சென்றது கிடையாது. தற்போது ஒரு ஆண்டாக அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. எனவே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்