மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரம், பாண்டியன்நகர் மறவபட்டி, சித்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமானோர் குடும்பங்களாக வசிக்கின்றனர். இவர்களில் பலர் வீடு இல்லாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு வீடுகட்டுவதற்காக பண்ணைப்பட்டி சாலை அருகே 22 ஏக்கர் நிலம் கடந்த 2009-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் நிலம் அளவீடு செய்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படாததால் 15 ஆண்டுகளாக அங்கு வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி லாரிகள் மூலம் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து அறிந்ததும் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த எரியோடு போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் பொக்லைன் எந்திரம், லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி மண் அள்ளியவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.