சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கழிவுநீர் பாட்டில்களுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கழிவுநீர் பாட்டில்களுடன் கிராம மக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-12 22:35 GMT

சுகாதாரமற்ற குடிநீர்

சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி ஊராட்சி காமராஜர் காலனியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளுக்கு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதை சரி செய்து கொடுக்குமாறும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது

இந்நிலையில், காமராஜர் காலனியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் நேற்று கழிவுநீர் பாட்டில்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாசநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

40 பேருக்கு காய்ச்சல்

காமராஜர் காலனியில் கழிவுநீர் தொட்டி அருகே குடிநீர் கிணறு உள்ளது. அங்கிருந்து தான் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் 400 குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் 40 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 பேர் மீது புகார்

ஓமலூர் அருகே தொளசம்பட்டி சேர்ந்தவர் சண்முகம். இவர், நேற்று தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவை அளித்தார்.

அதில், கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி எனது தந்தை மாரிமுத்து ஏரி வேலைக்கு சென்று பெயர் பதிவு செய்துவிட்டு தொளசம்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது மோதிவிட்டு சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த தந்தை மாரிமுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு மறுநாள் இறந்துவிட்டார். ஆனால் விபத்து ஏற்படுத்திய 2 பேர் மீது தொளசம்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கேட்டால் எனது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்