மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-12 19:13 GMT

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல்

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி (சடை பூசாரிபட்டி) பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆழ்குழாய் கிணற்றின் மூலமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தான் அந்த பகுதி மக்கள் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில தினங்களாக அந்த தண்ணீரும் மிகவும் குறைவாகவே வந்தது. மேலும் தண்ணீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மணப்பாறை -துவரங்குறிச்சி சாலையில் பொய்கைப்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்