கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

மானாமதுரை அருகே குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

Update: 2023-09-01 19:22 GMT

மானாமதுரை,

மானாமதுரை அருகே குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

மானாமதுரை அருகே கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கல்குறிச்சி, ஆலங்குளம், மாரியம்மன் நகர் ஆகிய பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக சரிவர குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள மோட்டார் அறையில் உள்ள மின்மோட்டார் பழுதாகியும், சில இடங்களில் உள்ள குழாய்களும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இந்த பகுதியில் சரிவர குடிதண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை. இதையடுத்து கடந்த பல நாட்களாக இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்த நிலையில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து மானாமதுரை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன், மானாமதுரை தாசில்தார் ராஜா மற்றும் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் லூயிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இந்த பகுதியில் பழுதான குடிநீர் குழாய்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரி செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க தொடங்கினர்.

இதையடுத்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்