டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-23 18:53 GMT

டாஸ்மாக் கடைகள்

பொன்னமராவதி தாலுகா தூத்தூர் ஊராட்சி மனப்பட்டியில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ஒரே ஊராட்சியில் 2 கடைகள் இயங்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி அப்பகுதி மக்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை, போலீசார் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் கோவில் அருகாமையில் உள்ள 500 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழக அரசு அறிவித்த பட்டியலில் இந்த கடைகள் இல்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி கோவை செல்லும் பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், பொன்னமராவதி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பொன்னமராவதி-புழுதிபட்டி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்