வெங்கல் அருகே சுரங்கப்பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

வெங்கல் அருகே சுரங்கப்பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-03-02 14:36 GMT

சென்னை-எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையில் சுமார் 133 கிலோமீட்டர் நீளத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை ஒன்று 200 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், வெங்கல் அருகே கீழானூர் கிராமத்தில் இந்த சாலையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 200 அடி சாலை இந்த பகுதியில் அமைத்தால் கிராம மக்கள் சாலையைக் கடந்து மறுபக்கம் செல்ல பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் இந்த பகுதியை கடந்து சென்று வர சுரங்கப்பாதை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கீழானூர் கிராமமக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி செங்குன்றம்-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழானூர் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டு சாலையை கடக்க கீழானூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுள்ள மேலானூர் வரையில் சர்வீஸ் சாலை அமைத்து அங்கு சுரங்க வழி பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதனால் சமரசம் அடைந்த கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் செங்குன்றம்-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்