தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கும்பகோணம் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-03-13 18:31 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வீட்டுமனைப்பட்டா

கும்பகோணம் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அரசு புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய பட்டா வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது. பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் பட்டா வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். அப்போது அவ்கள் வீட்டுமனை பட்டாவை உடனே வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

கும்பகோணம் கோட்டாட்சியர் நேரில் வருகை தந்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்து அனைவரும் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து கும்பகோணம் கோட்டாட்சியர் நேரில் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வருகிற 23-ந் தேதிக்கு(வியாழக்கிழமை) பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 2 மணி நேரத்துக்கு மேலாக தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்