காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
குத்தாலம் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை எனவும், வினியோகிக்கப்படும் குடிநீர் காவி கலந்த நிறத்தில் வருவதாகவும், இந்த குடிநீரை குடிப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவதாகவும் அந்தபகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தநிலையில் நேற்று உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தியும், சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கக்கோரியும் மேலத்தெரு கிராம மக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் நெய்க்குப்பை என்ற இடத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குத்தாலம் தாசில்தார் கோமதி, கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வார காலத்திற்குள் குடிநீரை சரி செய்து தருவதாகவும், அதற்குள் மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.