தண்ணீர், மண்ணின் தன்மையை அறியும் மத்திய அரசின் நிறுவனத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் தண்ணீர், மண்ணின் தன்மையை அறியும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசின் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்துக்கு ஒன்று திரண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-12-18 19:27 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் கிராமத்தில் உள்ள பகுதியில் மத்திய அரசு நிறுவனமான எம்.இ.சி.எல். நிறுவனம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, அந்த பகுதியில் உள்ள தண்ணீரின் தன்மை, மண்ணின் தன்மையை கண்டறியும் வகையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக நிறுவனத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தனர்.

திரண்டு வந்த கிராம மக்கள்

தங்கள் மீது புகார் அளிக்கப்பட்டது பற்றி அறிந்த எதிர்ப்பாளர்கள், தங்களுக்கு ஆதரவாளர்களான பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்களுடன் காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டில் ஒன்று திரண்டு, போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அமுதா, பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் வந்த அதிகாரிகள், எங்களுக்கு காட்டுமன்னார்கோவில், குமராட்சி சுற்றியுள்ள பகுதியில் 450 ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வு பணி மேற்கொள்ள உரிய அனுமதி பெற்றுள்ளோம். இதில் 436 பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 16 பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்தனர்.

வெளியேற வேண்டும்

தொடர்ந்து விவசாயிகள் தரப்பில், மோவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கொளஞ்சி போலீசாரிடம் கூறுகையில், இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு விவசாய நிலங்களை பாதிக்கும் திட்டங்களை மேற்கொள்ள இயலாது.

தற்போது எம்.இ.சி.எல். நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிக்கு பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் அவர்கள் பணிகளை நிறுத்திவிட்டு, உடனடியாக இந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே விவசாயிகள் அனைவரின் கோரிக்கை என்று பேசினார்.

தற்காலிகமாக நிறுத்தம்

இருதரப்பினரின் கருத்தை கேட்ட இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அமுதா, எம்.இ.சி.எல். நிறுவனம் இந்த பகுதியில் பணியை மேற்கொள்ள பெற்ற உரிய அனுமதி ஆணையை எங்களிடம் காண்பித்த பின்னர், பணியை தொடங்க வேண்டும். அதுவரை பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கூறினார். இதை ஏற்றுக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்