நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஜமாபந்தி நடந்தபோது நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-01 19:09 GMT

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையில் இன்று ஜமாபந்தி நடந்தது. இதில் நரியூத்து, கோட்டூர், பச்சமலையான் கோட்டை, நக்கலூத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் அரண்மனை கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை தாலுகா அலுவலத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆர்.டி.ஓ. பிரேம்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பல ஆண்டுகளாக நாங்கள் அரண்மனை கோட்டை பகுதியில் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. அதேபோல் எங்களுக்கு பட்டாவும் இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

எனவே எங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் கோரிக்கை தொடர்பான மனுவையும் ஆர்.டி.ஓ.விடம் கிராம மக்கள் வழங்கினர். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ. விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்