கோவில் நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
கோவில் நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள்நத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலத்தை அளந்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
அதன் பின்னர் பொதுமக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனு உள்பட மொத்தம் 198 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் பெற தேர்வு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 சிறப்பு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பாராட்டு சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.