திருத்துறைப்பூண்டியில் இருந்து கீரக்களூர், பூசலாங்குடி, புழுதிக்குடி வழியாககோட்டூருக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?- கிராம மக்கள்
திருத்துறைப்பூண்டியில் இருந்து கீரக்களூர், பூசலாங்குடி, புழுதிக்குடி வழியாக கோட்டூருக்கு அரசு பஸ் இயக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து கீரக்களூர், பூசலாங்குடி, புழுதிக்குடி வழியாக கோட்டூருக்கு அரசு பஸ் இயக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போக்குவரத்து வசதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர், புஞ்ஞையூர், முன்னியூர், பூசலாங்குடி, சிதம்பரக்கோட்டகம், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சோழங்கநல்லூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கோட்டூர், திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.
விளக்குடி, கீரக்களூர், பூசலாங்குடி, புழுதிக்குடி வழியாக கோட்டூர் வரை பாரத பிரதமர் சாலை மேம்பாடு திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது். எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து புஞ்ஞையூரில் டீக்கடை நடத்தி வரும் செல்லம்மாள் கூறியதாவது:-
பூசலாங்குடி, புஞ்ஞையூர், முன்னியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது.
இதனால் முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பஸ்வசதி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவம் பார்க்க முடியவில்லை. மாணவர்கள் தினசரி தாமதமாக பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
வேலைக்கு செல்லும் பெண்கள் உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் இரவில் நடந்தே வர வேண்டி இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து திருத்துறைப்பூண்டியில் இருந்து கீரக்களூர், பூசலாங்குடி, புழுதிக்குடி வழியாக கோட்டூருக்கு பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.