புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-15 19:33 GMT

கிராம சபை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் அடேஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் நளினி பாரதிராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். முத்துப்பட்டினம் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள சிதிலமடைந்த சிமெண்டு சாலை யை தார் சாலையாக மாற்ற வேண்டும். குளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை தலைவர் வீரம்மாள் முத்தையா மற்றும் பற்றாளர் அருள்குமரன், உதவியாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வேளாண்மை துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கே.ராசியமங்கலம்

கே.ராசியமங்கலத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சார்லஸ், துணை தலைவர் மாரிமுத்து, ஊராட்சி செயலர் வெண்ணிலா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை விடுதி

இதேபோல் புதுக்கோட்டைவிடுதி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அருள்மேரி மோசஸ் தங்கதுரை மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருமயம் ஊராட்சி

திருமயம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செங்காவிடுதியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற வேலைகளையும், அரசு தீர்மானங்களையும் பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வாசித்தார். இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதை 6 சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்க வேண்டும். இருந்தாலும் அந்த நிதியை வைத்து ஒவ்வொரு பகுதிக்கும் என்ன முக்கியமான வேலையோ அதை செய்து கொடுத்து, மேலும் கூடுதலாக நிதி கேட்டு வருகிறோம். புகையிலை பொருட்களை ஒழிக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் என்னிடம் முறையிடலாம், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் நான் பேசுகிறேன் என்றார். திருமயம் பஸ் நிலையத்திற்கு இரவு நேரங்களில் பஸ்கள் வரவில்லை என்று பொதுமக்கள் கூறினர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பேசி தீர்வு காணப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், துணைத்தலைவர் ரிஸ்வான், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் திட்ட அலுவலர், கால்நடை மருத்துவர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் ேதசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

குழிபிறை ஊராட்சி

திருமயம் அருகே குழிபிறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நாச்சம்மை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், அரசு கொண்டு வந்த தீர்மானங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார். பின்னர் ஊராட்சியில் நடைபெற்ற வேலைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து ஊராட்சி சம்பந்தமாக பொதுமக்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தி, ராசு, பழனியப்பன், முருகப்பன், நாகப்பன் குவடினேட்டர் சரவணன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்கள், சுகாதாரத்துறை செவிலியர்கள், சுய உதவி குழு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஆறுமுகம் நன்றி கூறினார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அழகப்பன் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்

பாண்டி பத்திரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் தலைமையிலும், ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில் குமரன் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பாண்டியராஜன் தீர்மானங்களை வாசித்தார்.

இதேபோல் திருப்பெருந்துறை ஊராட்சியில் தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தலைமையிலும், ஒன்றிக்குழு உறுப்பினர் பாலசுந்தரி கூத்தையா முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. புண்ணியவயல் ஊராட்சியில் தலைவர் சுரேஷ் தலைமையிலும், தாழனூர் ஊராட்சியில் தலைவர் முத்துக் காமாட்சி தலைமையிலும், மீமிசல் ஊராட்சியில் தலைவர் செல்வம் தலைமையிலும், காவதுகுடி ஊராட்சியில் தலைவர் சித்ரா சோனமுத்து தலைமையிலும். கீழ்க்குடி வாட்டாத்தூர் ஊராட்சியில் தலைவர் சரவணன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.

நார்த்தாமலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டார். மாவட்டம் முழுவதும் 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்