கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு போராட்டம் ரத்து
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு போராட்டம் ரத்து
வாய்மேடு:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக அணைக்கரை கூட்டு குடிநீர் மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்காமல் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பது என தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் லலிதா கலைச்செல்வன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாளை காலை தண்ணீர் பிரச்சினை உள்ள 14 ஊராட்சிகளுக்கும் உடனடியாக தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் புறக்கணிப்பை ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்து செய்தனர். இதில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.