திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராமசபையை புறக்கணித்து பொதுமக்கள் திடீர் போராட்டம் அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம எல்லையை பிரிப்பதற்கு கண்டனம் தெரிவித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு சென்ற அமைச்சர் பொன்முடியை அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-01 18:45 GMT


திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராம எல்லையை பிரித்து டி.எடப்பாளையம் என்ற தனி வருவாய் கிராமம் உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இ்ந்த நிலையில் சித்தலிங்கமடம் கிராமத்தில் நேற்று காலை 10 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கெங்கையம்மாள், கிராம நிர்வாக அலுவலர் லெனின் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அங்கு வந்தனர். ஆனால் கிராம மக்கள் யாரும் வரவில்லை.

புறக்கணித்து போராட்டம்

சித்தலிங்கமடம் கிராமஎல்லையை பிரித்து டி.எடப்பாளையம் என்ற தனி வருவாய் கிராமம் உருவாக்குவதை கண்டித்து கிராமமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அப்பகுதியை சோ்ந்த வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் நீலகண்டன்(வயது 45) என்பவர் தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டத்தை அறிந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்த பின் எல்லைகளை பிரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இந்த பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்து தரப்படும் என்றார்.

இதை ஏற்காத பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கிராமமக்களை சமாதானம் செய்தனர்.

இதையடுத்து அமைச்சர் பொன்முடி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்