கொங்கர்பாளையம் கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

கொங்கர்பாளையம் கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-15 22:23 GMT

டி.என்.பாளையம்

கொங்கர்பாளையம் கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபை கூட்டம்

டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் வினோபா நகர் மலையையொட்டி உள்ள காலனி பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவி ஜானகி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொங்கர்பாளையம், கவுண்டன்பாளையம், வினோபாநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளதாக தெரிவித்தனர். 364 ஏக்கர் நிலம் கொண்ட பூமி தான இயக்கம் வழங்கிய இடத்தில் வசிக்கும் வினோபா நகர் மக்கள் விவசாயம் சார்ந்த மின்சார வசதி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயம் சார்ந்த மானிய கடன் மற்றும் நகை கடன் போன்ற சலுகைகளை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

வாக்குவாதம்

கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமாக நடைபெறுவதோடு, இரவு நேரத்தில் இயங்குவதாகவும், ஆழ்துளை போட்டு பாறைகளில் வெடி வைப்பதால் வீடுகள் விரிசல் விடுவதோடு, இடையூறாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் பேசினர். உடனே இதற்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் பேசுகையில், 'கல்குவாரியால் இங்குள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதாகவும், பல குடும்பங்கள் இதை நம்பி இருப்பதாகவும்,' தெரிவித்தனர். இதன்காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பங்களாப்புதூர் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தினர். மேலும் இரு தரப்பினரும் ஊராட்சி தலைவியிடம் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து கிராம சபை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊராட்சி தலைவி ஜானகி பெற்றுக்கொண்டதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வேளாண்துறை அலுவலர், கல்வித்துறை, கிராம சுகாதார அலுவலர்கள், கால்நடைத்துறையினர், மருத்துவ அலுவலர் உட்பட துறை சார்ந்த அலுவலக பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்